Rt.Rev.Dr.J.J.christdoss

Rt.Rev.Dr.J.J.christdoss

இம்மானுவேலராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். 

ஆண்டவருடைய பெரிதான கிருபையினால் இந்த ஆண்டின் இறுதி மாதத்தில் பிரவேசித்திருக்கிறோம். காலங்கள் வேகமாகச் செல்கிறது. இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளிலும் ஆண்டவர் நம்மை பாதுகாத்து, போஷித்து, வழி நடத்தி வந்த மேலான தயவுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை எண்ணிப் பார்க்கும் பொழுது, நம் உள்ளம் மகிழ்ச்சியினால் நிறைந்து, நன்றி பலிகள் வெளிப்பபடட்டும். உலகம் தரமுடியாத மகிழ்ச்சியை கர்த்தரே நமக்குத் தருகிறார். அம்மகிழ்ச்சி ஆண்டவரின் பிறப்பினை நாம் நினைவுகூறும் பொழுது இரட்டிப்பாகிறது.

கிறிஸ்து பிறப்பின் வருகையின் நாட்களை நாம் ஆசரிக்க ஆயத்தப்படுகிறோம். கிறிஸ்துவின் பிறப்பு மனுக்குலம் அனைத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும் விடுதலை நற்செய்தி. ஏனெனில் கிறிஸ்துவானவர் மனுக்குலத்தின் இரட்சகர். நம்மோடிருக்கும்படியாக விண்ணுலகைத் துறந்து மண்ணுலகிலே ஒரு குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ‘இம்மானுவேல்” என்று பெயரிட்டார்கள். இம்மானுவேல் என்பதற்கு ‘இறைவன் நம்மோடிருக்கிறார்” என்பதே பொருள்.

ஆம் பிரியமானவர்களே இறைவன் நம் வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் நம்மோடிருக்கிறார். நமது வாழ்வின் பாடுகள், துன்பங்கள், பிரச்சனைகள், கண்ணீர் கவலைகளில் நம்மை அறிந்து நமக்கு உதவி செய்யும் மீட்பராக நம்மை நேசித்து நமக்கு மகிழ்ச்சியை தருகிறார். எச்சூழலிலும் நாம் அவரையே பற்றிக் கொண்டு வாழும் போது மாறாத மகிழ்ச்சி நம் உள்ளங்களை நிரப்பும்.

இறைவன் அருளும் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்ட நாம் அம்மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் நன்னாலே கிறிஸ்மஸ் பண்டிகை. காணக்கூடாத கடவுள் மனிதர்களாகிய நாம் கண்டு கொள்ளவும், நம்மோடு ஒருவராக நம்மைப் போல இவ்வுலகில் வாழ்ந்து, பரிசுத்தராக தம்மை ஒப்புக் கொடுத்து நம்மை மீட்டெடுக்கவுமே இவ்வுலகிற்கு வந்தார்.

இயேசு கிறிஸ்துவால் நாம் விடுதலை பெற்றுள்ளோம். அவருடைய விலைமதிப்பில்லா இரத்தத்தினாலே கழுவப்பட்டிருப்பது எத்தனை மகிழ்ச்சி. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது அது இரட்டிப்பாகிறது. மகிழ்ந்திருங்கள் மன்னவன் இயேசு உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பிறந்திருக்கிறார்.

இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். 

In His Service

Rt.Rev.J.J. Christdoss
Bishop in Tirunelveli